கரோனா தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த சில வாரங்களாக உத்தரப் பிரதேசத்திலும் கரோனா பரவல் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் கமல் ராணிக்கு கோவிட்-19 இருப்பது ஜூலை மாதம் 18ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஷியாம பிரசாத் முகர்ஜி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
கமல் ராணியின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனிற்றி கமல் ராணி உயிரிழந்தார்.
தற்போது, கான்பூரில் உள்ள கட்டம்பூரில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல் ராணி, இரண்டு முறை மக்களவையில் உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கமல் ராணி உயிரிழந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஆதித்யநாத் தனது அயோத்தி பயணத்தை ரத்து செய்துள்ளதாக கூடுதல் தலைமைச் செயலர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்தார்.
கமல் ராணியின் மரணம் குறித்து யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,"கமல் ராணி ஒரு அனுபவம் வாய்ந்த திறமையான தலைவராக இருந்தார். அவர் தனது பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றினார். அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள மக்கள் பிரதிநிதி. அவர் எப்போதும் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் நலனுக்காக உழைத்துவந்தார்" என்று தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 89,068 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1,677 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'நிலநடுக்கமே வந்தாலும் அசைக்க முடியாது' - ராமர் கோயிலை வடிவமைக்கும் கட்டட கலைஞர்!