கடந்த மூன்று நாட்களாக, நாட்டின் தலைநகர் டெல்லியில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் தற்போதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். உளவுத்துறை அதிகாரி, தலைமைக் காவலர் என காவல் துறை தரப்பிலிருந்தே இருவர் உயிரிழந்துள்ள நிலையில், டெல்லி காவல் துறை மெத்தனப் போக்கைக் கண்டித்து பல்வேறு தரப்பினர் கடும் கண்டனக் குரலை எழுப்பி வருகின்றனர்.
டெல்லி அரசும், காவல்துறையும் தங்கள் கடமையைச் சரிவர மேற்கொள்ளத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டிய டெல்லி உயர் நீதிமன்றம் உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் டெல்லியில் வசிக்கும் அந்நாட்டினரை பாதுகாப்பாக வசிக்குமாறு தற்போது அறிவுறுத்தியுள்ளது. போராட்டம் தீவிரமாக நடைபெறும் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த அமெரிக்கத் தூதரகம், டெல்லி களச்சூழலை தெரிந்துகொள்ள தொடர்ச்சியாக உள்ளூர் ஊடகங்களை கவனிக்குமாறு தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையைத் தொடர்ந்து பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளும் டெல்லியில் வசிக்கும், தன்நாட்டு குடிமக்களை பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.
இதையும் படிங்க: கொரோனா பாதிப்பு - சீனாவுக்கு அடுத்த இடத்தில் தென்கொரியா!