இரண்டு நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும், அந்நாட்டு முதல் பெண்மணி மெலனியா ட்ரம்பும் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக, மெலனியா டெல்லி அரசு சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளார். இதில் கலந்துகொள்ளும் விருந்தினர்களின் பெயர் பட்டியலிலிருந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோரின் பெயர் நீக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்துவிட்டதாக ஆம் ஆத்மி சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கு விளக்கமளித்துள்ள அமெரிக்க தூதரகம், "'டெல்லி முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. டெல்லி பள்ளிகளில் அவர்கள் மேற்கொண்ட சாதனைகளை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால், இது அரசியல் நிகழ்ச்சி அல்ல" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, "அமெரிக்க தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை மதிக்கிறோம். எங்கள் பெயர் அந்த விழாவில் கலந்துகொள்பவர்களின் பட்டியலில் இருக்கும் பட்சத்தில், மெலனியா ட்ரம்ப்பை வரவேற்றிருந்தால் மகிழ்ந்திருப்போம்" என்றார்.
இதையும் படிங்க: ஹோலி முதல் கோலி வரை... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உரையின் சாராம்சம்!