இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்ததாக அந்நாடு ஒப்புக் கொண்டது. இதையடுத்து, இரு நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிவருகிறது.
இந்நிலையில், இந்தியா, சீனா எல்லை பகுதியில் நிலவும் சூழலை தொடர்ந்து கண்காணித்துவருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார். சீன ராணுவத்தின் செயல்பாடுகள் பிராந்தியத்தின் நிலைத்தன்மையை கெடுக்கும் விதமாக உள்ளது என கூறிய மார்க் எஸ்பர், கூட்டு நாடுகளின் இறையாண்மையை காக்க அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என தெரிவித்தார்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமெரிக்க, இந்திய கடற்படை கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில் மார்க் எஸ்பரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தென் சீனக் கடலில் ரொனால்டு ரேகன் கப்பலுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த யூஎஸ்எஸ் நிமிட்ஸ் கப்பல் தற்போது இந்திய பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகிறது. மற்ற நாடுகளில் அத்துமீறலை குறைத்து சுதந்திரமான இந்திய பசிபிக் பெருங்கடலை உறுதி செய்யும் வகையில் யூஎஸ்எஸ் நிமிட்ஸ் கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டுவருவதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஐசிஎம்ஆர் வெளியிட்ட புதிய வழிகாட்டுதல் என்ன சொல்கிறது?