பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர், 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி மும்பையில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
கடல் மார்க்கமாக ஊடுருவிய பயங்கரவாதிகள், மும்பை சிஎஸ்டி ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல், காமா மருத்துவமனை, நாரிமன் ஹவுஸ் வணிகவளாகம் உள்ளிட்ட இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்தும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

நாட்டையே உலுக்கிய இந்தக் கொடூரத் தாக்குதலில் பொதுமக்கள், வெளிநாட்டினர், காவல் துறையினர் உள்ளிட்ட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்தப் பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, அதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, இந்தத் தாக்குதலில் உயிரிழந்த காவல் துறையினரின் நினைவிடத்தில், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ், அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், இந்த கொடூரத் தாக்குதலில் உயிர் நீர்த்தவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.