தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனது குடியிருப்பு வளாகத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்த தற்கொலைக்கு முயன்றார். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அந்த நபரை காப்பாற்ற, அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆபத்தான கட்டத்திலிருந்த அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, தற்கொலை செய்த நபர் பற்றி விசாரணை மேற்கொண்டபோது, அந்த நபர் ஒரு உதவி பேராசிரியர் என்றும் அவரது மனைவி தாசில்தார் பதவியில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
ரூ. 30 லட்சம் ரொக்கம், தங்கம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களை மோசடி செய்த செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி (தாசில்தார்) தெலங்கானா ஊழல் தடுப்பு பணியக அலுவலர்களால் (ஏசிபி) ஜூன் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக அறிய முடிகிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது மனைவியை பிணையில் எடுக்க அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால், மிகுந்த மனச்சோர்வடைந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.