உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க தலித் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் எதிர்க் கட்சிகளும், பல்வேறு அரசியல் தலைவர்களும் பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் ஏற்படுத்திய வடுவே ஆறாத நிலையில், ஹத்ராஸில் நான்கு வயது குழந்தை பாலியல் வன்புணர்வுக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்குழந்தையின் உறவினரே பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அக்குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும், ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விடுதலையான மெகபூபா முப்தி: வரவேற்ற ஃபரூக் அப்துல்லா