உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைராலனதை அடுத்து இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணையில், இந்த வீடியோ சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே எடுக்கப்பட்டது. வீடியோவின் அடிப்படையில் இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி சக்ரேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
கொண்டாட்டங்களின்போது துப்பாக்கியால் சுடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களது துப்பாக்கி உரிமம் ரத்து செய்யப்படும் எனத் துணை காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் சவுராசியா தெரிவித்துள்ளார்.
இதேபோல், கடந்த ஒருவாரத்திற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில் கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிலர் ஈடுபட்டதாக அவர்கள் மீதும் காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.
வட இந்திய திருமண விழாக்களில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகின்றது. இவ்வாறு சுடும்போது, தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் மற்றும் உயிரிழப்புகள் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கின்றது. வட மாநில அரசுகள் இதற்கு தடை விதித்திருந்தாலும் தடையை மீறி விழாக்களில் துப்பாக்கிச் சுடு நடப்பது தொடர்கிறது.