கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கே திண்டாடி வருகின்றனர்.
கரோனா வைரஸ் பாதிப்பால், உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 3 ஆயிரத்து 664 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 82 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கரோனா வைரசைக் கருத்தில் கொண்டு உத்தரப் பிரதேச மாநில அரசு சார்பாக 2020-21ஆம் நிதியாண்டில் அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்வதற்குத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவு பெறப்பட்டே இடமாற்றம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள், மருத்துவ எமர்ஜென்சி, பதவி உயர்வு, ராஜினாமா, இடைநீக்கம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, அந்தந்த நிர்வாக உயர் அலுவலர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசித்து முடிவு செய்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 20 லட்சம் கோடி - என்னென்ன திட்டங்கள்? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!