காணொலி வாயிலாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, 'இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தோல்வி அடைந்துள்ளது. வரும் காலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு வைத்துள்ள திட்டங்கள் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும்.
காங்கிரஸ் கட்சியினர் அரசின் திட்டம் என்ன எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் முன்னோக்கிச் செல்வதற்காக அரசு வகுத்துள்ள திட்டங்கள் என்ன? எனப் பலவற்றையும் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்' எனக் கூறினார்.
ராகுல் காந்தியின் கேள்விகள் குறித்து கருத்துத் தெரிவித்த உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா, 'வரும் ஆண்டுகளில் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஆளும் பாஜக அரசினை எதிர்கொள்ள ஏற்பட்டுள்ள பயத்தின் காரணமாக மத்திய அரசின் திட்டங்களைத் தொடர்ந்து ராகுல் காந்தி அவதூறு பரப்பிவருகிறார்.
கடந்த 2014,2017, 2019 ஆகிய மூன்று தேர்தல்களிலும் தொடர் தோல்வியைச் சந்தித்த ராகுல் காந்தி, வரும் ஆண்டுகளில் (2022, 2024) நடைபெறவுள்ள தேர்தல்களிலும் நிச்சயம் தோல்வியைச் சந்தித்துவிடுவோமோ என்ற அச்சத்திலேயே தேவையற்ற கருத்துகளை பரப்பி வருகிறார். மக்கள் இவருடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மத்திய அரசின் லாக்டவுன் யுக்தி தோல்வி - ராகுல் காந்தி