உத்தரப் பிரதேச மாநிலத்தில் குற்றம் அதிகம் நடைபெறுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், குற்றங்கள் குறித்த விவரங்களை மறைப்பதைத் தவிர அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வேறு எந்த வேலையும் செய்வதில்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
மாநிலத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்த தரவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரியங்கா, "கடந்த மூன்று ஆண்டுகளாக, மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் உத்தரப் பிரதேசத்தில் அதிக கொலைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. ஒரு நாளுக்கு, 12 கொலைச் சம்பவம் மாநிலத்தில் அரங்கேறுகின்றன.
2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை உத்தரப் பிரதேசத்தில் 24 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதுகுறித்து தரவுகளை மறைப்பதைத் தவிர முதலமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோர் வேறு எந்த வேலையும் செய்வதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதால்தான், அவர்கள் சுதந்திரமாக அலைகின்றனர். அதற்குப் பதில், நம் அலுவலர்களும், ராணுவ வீரர்களும் பதிலளிக்கின்றனர்" எனப் பதிவிட்டுள்ளார்.
கான்பூரின் உள்ளூர் ரவுடியான விகாஸ் துபே என்பவரைக் காவல் துறையினர் கைதுசெய்யச் சென்றபோது, துபேவின் ஆட்கள் காவல் துறையினர் மீது நடத்திய தாக்குதலில் காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்பட எட்டு காவலர்கள் படுகொலை செய்யப்பட்டனர். காவல் துறையினர் மீது நடத்தப்பட்ட இந்தக் கொலைவெறித் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், பிரியங்கா காந்தி இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா செலவுகளுக்கு மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?