ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியைச் சேர்ந்த ஷாகில் அகமத் என்ற நபருக்கு அல்கொய்தா அமைப்புடன் தொடர்புள்ளதாகக் கூறி உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்பு அமைப்பு அவரை லக்னோவில் கைதுசெய்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய ஹிகாத் அமைப்பிற்கு ஆதரவாகப் போராட அகமத் தூண்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவர், மென்பொருள் பயன்பாடுகளின் மூலம் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஜூன் 18ஆம் தேதி, பரேலி மாவட்டத்தின் குய்லா பகுதியைச் சேர்ந்த அல்கொய்தா செயற்பாட்டாளர் இனாமுல் ஹக்கையும், ஜூன் 21ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் பகுதியைச் சேர்ந்த சல்மான் குர்ஷித் என்ற மற்றொரு நபரையும் சந்தேகத்திற்கிடமான முறையில் உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்பு அமைப்பு கைதுசெய்தது.
இவர்களிடம் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில், சல்மான் குர்ஷித் ஆகியோர் டெலிகிராம் என்ற சமூக வலைதளம் மூலம் இனாமுல் ஹக்குடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கண்டறியப்பட்டது. மேலும் அவர்கள் ஜிகாதி என்ற குழுவின் மூலம் பல இளைஞர்களை ஒன்றிணைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படத் தூண்டியது தெரியவந்துள்ளது.