அழிந்துவரும் சமகால சமூக அறம்
இந்தியாவில் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலநிலை உள்ளது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவை, சர்வதேச அளவில் தலை குனியவைத்துள்ளன. கொடியவனை நல்லவன் வீழ்த்துவதை பண்டிகைகளாகக் கொண்டாடுவது நம் இந்திய சமூகத்தின் பண்பாடு.
ஆனால், நீதி என்பது இந்தியாவில் துன்பப்படுவர்களுக்கு உடனடியாகக் கிடைப்பதில்லை. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய நீதியை உடனடியாக வழங்க இந்த நாட்டின் நீதி அமைப்புகள் தொடர்ந்து தவறிவருகின்றன. இதனால், சமகால சமூகத்தின் அறம் அழிந்துவருகிறது.
உன்னாவ் - உ.பி. அரசின் தீர்மானம்
உன்னாவில் பாதிக்கப்பட்ட பெண், முதலமைச்சர் வீட்டருகே நீதி கேட்டுத் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பின்னரே, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நாட்டில், நீதி வழங்கும் அமைப்புகளின் பொறுப்பற்றத் தன்மையைத்தானே அது காட்டுகிறது!
உன்னாவ் வழக்கில் வழக்குப்பதிவு செய்யவே சில மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர் என்றால், காவல் அலுவலர்களின் அலட்சியத்தை அறிந்துகொள்ள முடிகிறது. சமீபத்தில், உத்தரப் பிரதேசத்தில் யோகி அரசு ஒரு தீர்மானம் கொண்டுவந்தது.
குற்றமிழைக்கும் குற்றவாளிகளை சமூகத்திலிருந்து அகற்றும் தீர்மானம் அது. இதன் விளைவாக, 100-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள், சமூகவிரோதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார்
அதே வேளையில், இன்னொரு விஷயத்தையும் நாம் பதிவுசெய்வது அவசியம். 2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பதவியேற்று மூன்று மாத காலம்தான் ஆகியிருக்கும். மாங்கி என்ற கிராமத்திலிருந்து 17 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டார்.
தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியின் பங்கர்மா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் செங்கார், அவரின் சகோதரர் அதுப் சிங் ஆகியோர் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு, சட்டப்பேரவை உறுப்பினரின் கோரப்பிடியிலிருந்து சிறுமி விடுவிக்கப்பட்டார். ஆனால், காவலர்கள் கடத்தல் வழக்காக மட்டுமே இதை முதலில் பதிவுசெய்தனர்.
இத்தோடு, இந்த அலட்சியம் முடிந்துவிடவில்லை. காவலர்களின் முன்னிலையிலேயே, புகார் அளித்த சிறுமியின் தந்தையை குல்தீப் சிங் செங்காரின் ஆதரவாளர்கள் அடித்து உதைத்தனர்.
சிறுமியை கொலைசெய்து-விடுவதாகவும் மிரட்டல்விடுத்தனர். உச்சக்கட்டமாக சிறுமி உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் வீட்டின் முன்பு தற்கொலை செய்துகொள்ளும் முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
சிபிஐ-க்கு மாறிய உன்னாவ் வழக்கு
இதற்கு, அடுத்தநாளே காவல் துறையினரின் காவலில் இருந்த சிறுமியின் தந்தை சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தும்போனார். ஒருவழியாக, அலகபாத் உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட்டு வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட, இந்த வழக்கில் சிபிஐ அலுவலர்களும் ஓராண்டு காலமாக விசாரணையில் ஈடுபடவில்லை. இந்தக் காலகட்டத்தில் குல்தீப் செங்கார், அவரின் ஆதரவாளர்கள் - பாதிக்கப்பட்ட சிறுமி, அவரின் உறவினர்களிடம் வழக்கைத் திரும்பப் பெறுமாறு பல வழிகளில் துன்புறுத்தினர்.
இருவர் மரணம் - செங்காருக்குச் சிறை
சிறுமியின் குடும்பத்தை கொலைசெய்யும் முயற்சியிலும் ஈடுபட்டார் சட்டப்பேரவை உறுப்பினர் செங்கார். பாதிக்கப்பட்ட சிறுமி தனது வழக்கறிஞர், உறவினர்களுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது லாரி ஒன்று மோதியது.
இந்த விபத்தில், நல்வாய்ப்பாக சிறுமியும் வழக்கறிஞரும் உயிர்பிழைத்தனர். ஆனால் சிறுமியின் உறவினர்கள் இருவர் மரணமடைந்தனர். இத்தகைய, கொடிய சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது.
அதற்கு பிறகே, குல்தீப் சிங் செங்கார் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த வழக்கில், நீதிமன்றத்தில் செங்காரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து தற்போது, அவரை சாகும்வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
'தூங்கிலிடுங்க' - கடைசி வேண்டுகோள்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் ஐந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக சென்றுகொண்டிருந்த பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண் தீவைத்து எரிக்கப்பட்டார்.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடிய பிறகு அந்தப் பெண் கரிக்கட்டையாக சரிந்து கீழே விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், 'என்னை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவர்களைத் தூக்கிலிட வேண்டும்' என்ற தனது கடைசி வேண்டுகோளுடன் உயிர் நீத்தார்.
அதேபோல, பஞ்சாப் மாநிலத்தில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண் ஒருவர், காவலர்கள் வழக்குப்பதிவு செய்ய மறுத்த காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டார்.
அரசியல்வாதிகள் குற்றவாளிகள்
'அரசியல்வாதிகள் தங்களுக்குள்ள அதிகார பலத்தால் குற்றங்கள் இழைப்பது குறித்து பயம் கொள்வதில்லை. மேலும், சட்டத்தை தங்களுக்குச் சாதகமாக வளைத்துக் கொள்ளலாம் என்றும் கருதுகின்றனர். இது அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறுதல், ஜனநாயகத்தின் குரல் வளையை கருவறுப்பதற்குச் சமம்' என்று குடியரசு முன்னாள் துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த் முன்னர் ஒருமுறை கவலை தெரிவித்திருந்தார்.
தற்போது, இந்திய ஜனநாயக அமைப்பில் ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவிவருகிறது. நாட்டில் அரசியல்வாதிகளால் நிகழ்த்தப்படும் குற்றங்கள் நம்மை உலக அரங்கில் தலை குனியவைத்துள்ளன. வெட்கக்கேடான விஷயங்களை உணரும் மனப்பான்மையை உணர இங்கே யாரும் தயாராக இல்லை. இந்திய ஜனநாயக அமைப்பு அதன் உண்மை முகத்தை இழந்துள்ளது.
குற்றவியல் குற்றவாளிகளை வெற்றிபெறும் குதிரைகளாகக் கருதி அவர்களை அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடவைக்கின்றன. அவர்களும் வெற்றிபெற்று அதீத மரியாதையுடன் சட்டப்பேரவைக்குள் நுழைகின்றனர்.
செங்காரின் கட்சித் தாவல்கள்
குல்தீப் சிங் செங்காரைப் பொறுத்தவரை, அவர் நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர் பிறகு அந்தக் கட்சியிலிருந்து விலகினார்.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானார். பிறகு, முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து இருமுறை சட்டப்பேரவை பதவி வகித்தார்.
கடைசியாக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். அரசியல் செல்வாக்கு மிகுந்த குல்தீப் சிங்காரை எதிர்க்க, அநீதிகளை கண்டிக்க எந்த அரசியல் கட்சிக்கும் துணிவு இல்லை. இதேபோன்ற நிலையை இந்தியா முழுமைக்கும் பல மாநிலங்களில் காண முடிகிறது. ஜனநாயகமும் ஆட்சியமைப்பும் இத்தகைய குற்றவாளிகளுக்கு கட்டுப்பட்டால் நாட்டில் என்ன நடக்கும்?
அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை!
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, 'உன்னாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை குல்தீப் செங்காரின் சகோதரர் கொல்ல முயன்றுள்ளார். ஆனால், இந்த விஷயத்தில்கூட தகுந்த நடவடிக்கை எடுக்க முடியாமல் சட்டம் முடங்கி கிடக்கிறது' என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்த நாட்டில் யாரையும்விட அதிகாரம் படைத்தது என்றும் நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதியின் இந்தக் கருத்து 'அரசியல்வாதி குற்றவாளி'களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதோடு, காவல் துறை, விசாரணை அமைப்புகள் அரசியல் குற்றவாளிகளுக்கு வளைந்து கொடுக்கக்கூடாத தன்மையுடையவையாக இருக்க வேண்டும்.
கட்சிகளுக்கு அறிவுரை
அதற்கான, சூழல்கள் உருவாக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவளிக்கும் போக்கை கைவிட்டு, அவர்களை முற்றிலும் புறக்கணிக்கும் முடிவை அரசியல் கட்சிகள் எடுப்பதே நல்லது!
இதையும் படிங்க: உன்னாவ் பாலியல் வழக்கு: நீக்கப்பட்ட பாஜக எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை!