கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாத இறுதியில் பொது ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்நிலையில், தற்போது மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை படிப்படியாக அறிவித்து வருகிறது
அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட நான்காம் கட்ட தளர்வுகள் அடிப்படையில், அரசு வழிகாட்டுதலைப் பின்பற்றி, சுமார் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு ஆந்திரா, அஸ்ஸாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
அதாவது, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டும் தங்களது விருப்பத்தின்பேரில் பள்ளிகளுக்கு வரலாம். மாணவர்களின் வருகை கட்டாயம் அல்ல. ஆனால்,பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள், பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பள்ளிகளில் மாணவர்கள் / ஆசிரியர்கள் / ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்:
1.முடிந்தவரை குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
2.மாஸ்க் அணிவது கட்டாயம்
3.அவ்வப்போது கிருமி நாசினி தெளித்தும், சோப்பு போட்டும் கைகளை சுத்தம் செய்வது அவசியம்
4.இருமல் அல்லது தும்மல் வரும்போது வாய் மற்றும் மூக்கை திசு அல்லது கைக்குட்டை மூலம் மூடிக்கொள்ள வேண்டும்.
5. பொதுவெளியில் எச்சில் துப்புவதற்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா தொற்று பரவல் அச்சம் உள்ளதால் டெல்லி, குஜராத், கேரளா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கர்நாடகா, பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படாது என அந்தந்த மாநில அரசுகள் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.