மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, குர்கான் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பின் கரோனாவில் இருந்து குணமடைந்த அவர், ஆகஸ்ட் இரண்டாவது வாரம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இருப்பினும், அவருக்கு மீண்டும் உடல் வலி மற்றும் சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 18ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனாவுக்கு பிந்தைய வார்டில் அமித் ஷா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் 55 வயதாகும் அமித் ஷா உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் இணையத்தில் பரவின. அதற்கு மறுப்பு தெரிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம், அமித் ஷா நலமுடன் இருப்பதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அறிக்கை வெளியிட்டது.
அதன்படி, இன்று (ஆகஸ்ட் 31) காலை 7 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து மத்திய அமைச்சர் அமித் ஷா வீடு திரும்பினார். நாடு முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிரது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று (ஆகஸ்ட் 30) ஒரே நாளில் 78,761 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் தற்போதுவரை 36 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மோடி பிறந்தநாள்: சேவை வாரமாக கொண்டாடும் பாஜக