நாடு முழுவதும் தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 800ஐ தாண்டியுள்ளது. இன்றுடன் மூன்றாவது லாக்டவுன் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நகர்வுகளை எவ்வாறு செயல்படுத்தலாம் என மத்திய அரசு திட்டங்களை மேற்கொண்டுவருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகமுள்ள 12 மாநிலங்களில் கள நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்ய மத்திய சுகாதராத் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், மேற்குவங்கம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மத்திய சுகாதாரத் துறை செயலர் ப்ரீதி சுடான நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நாட்டில் உள்ள கரோனா பாதிப்பின் 80 விழுக்காடு மேற்கண்ட மாநிலங்களில் மட்டுமே உள்ளன. மாவட்ட வாரியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நோய்த் தொற்று அதிகமுள்ள பகுதிகளை எவ்வாறு கையாள்வது என மாவட்ட நிர்வாகங்களுடன் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பான அறிக்கை தயார் செய்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் பகிர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெளிமாநில தொழிலாளர்கள் 560 பேருக்கு கரோனா - அதிர்ச்சியில் பிகார்