உத்தரப்பிரதேசம் பரேலியில் பிரேம்நகர் பகுதியைச் சேர்ந்த ஜாவேத் அன்சாரி, ஓவியராக உள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன.
கரோனா தொற்றின் காரணமாக ஜாவேத்தின் தொழிலில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக பெரும் பண நெருக்கடியில் சிக்கித் தவித்துள்ளார். மிகவும் சிரமப்பட்டு குடும்பத்தை வழிநடத்தி வரும் சமயத்தில், இரண்டு குழந்தைகளின் பள்ளிக்கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு பள்ளி நிர்வாகம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. இல்லையென்றால், பள்ளியிலிருந்து குழந்தைகளை வெளியேற்றிவிடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குழந்தைகளின் கல்விக் கட்டணத்திற்கு பணம் இல்லாமல் தவித்த ஜாவேத், மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், “எனது குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தை செலுத்த பணம் இல்லாமல் தவித்துவருகிறேன். தயவுசெய்து எனது சிறுநீரகத்தை விற்க அனுமதியளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட பள்ளி கல்விப் பொறுப்பாளரான கிரிஷ் சந்திர யாதவ் கூறுகையில், “இது குறித்து எங்களுக்கு எந்தவிதமான எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றும் வரவில்லை. ஒரு வேளை புகார் வந்தால், பள்ளி நிர்வாகத்தின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.