உச்சகட்ட பரபரப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசியல் களத்தை, உச்ச நீதிமன்ற தீர்ப்பு தடுத்து நிறுத்தி, ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட என்சிபி (தேசியவாத காங்கிரஸ்) எம்.எல்.ஏ.க்கள் தனது பக்கம் தான் உள்ளனர் என்று சிவசேனா தன் வலிமையைக் காட்டியதன் மூலம், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல முடியாது என்று பயந்த அஜித் பவாரும் தேவேந்திர ஃபட்னாவிஸும் தத்தமது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து காங்கிரஸ், என்சிபி எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 166 பேரின் பலம் தன்னிடம் இருப்பதாகக் கூறி, சிவசேனா ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரி கடிதத்தை அளித்தது. அதன்படி, இன்று(நவ.28) மாலை 6:40 மணிக்கு மும்பையிலுள்ள சிவாஜி பூங்காவில், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாக ஆளுநர் கூறினார்.
முன்னதாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அதில் மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதற்கான தீர்மானம் முதலில் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டணிக்கு 'மகா விகாஸ் அகாதி' எனப் பெயரிடப்பட்டு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை, முதலமைச்சராகத் தேர்வு செய்வதற்கான முடிவு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, தேர்தலில் வெற்றிபெற்ற 288 எம்.எல்.ஏ.க்களுக்கு, இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்ட காளிதாஸ் கோலம்பகர் நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்து சட்டசபைக் கூட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து இன்று மாலை நடைபெறும் உத்தவ் தாக்கரேயின் பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட 400 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தாக்கரே குடும்பத்தில் முதல் முதலமைச்சராகவுள்ள உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவின் 29ஆவது முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.
இந்நிலையில், உத்தவ் தாக்கரேயின் பதவியேற்பு விழாவில் பாதுகாப்பு குறித்து மும்பை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. ''பதவியேற்வு விழா நடக்கும் நிகழ்வு குறித்து நீதிமன்றம் கருத்துக் கூற விரும்பவில்லை. விழாவில் எந்தவித அசாம்பாவிதமும் நடைபெறாமலிருக்க பிரார்த்திக்கிறோம்'' என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இதுபோன்ற செயல்பாடுகளுக்கு பொது மைதானத்தை பயன்படுத்துவதை இனி வழக்கமாக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது. நீண்ட காலம் நட்பிலிருந்த பாஜகவுடன் சிவசேனா முறிவை ஏற்படுத்திக் கொண்டதால், இரு கட்சித் தொண்டர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்திருப்பதாக தெரிகிறது.
வன்முறை வெறியாட்டங்களின்றி அமைதியான முறையில், பதவியேற்பு விழா நடைபெற வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சராகும் உத்தவ்: சோனியா, மன்மோகனுக்கு அழைப்பு