மகாராஷ்டிர சட்டப்ரேவைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ் என இரு கூட்டணிக்கும் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டு ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.
பல்வேறு அரசியல் குழப்பங்களுக்குப் பின் இறுதியில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தது. சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே கடந்தாண்டு நவம்பர் 28ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார். அதன்பின் இம்மாதத் தொடக்கத்தில் மகாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது உறுப்பினர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி இந்த ஒன்பது உறுப்பினர்களிலேயே உத்தவ் தாக்கரேதான் பணக்காரராக உள்ளார். அவர் தனது மனுவில் 146.26 கோடி மதிப்பிலான சொத்துகள் தனக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஒன்பது நபர்களில் பாஜகவைச் சேர்ந்த கோபிசந்த் படல்கர் என்பவரின் சொத்து மதிப்பு 87.63 லட்ச ரூபாயாக உள்ளது. இவரைத் தவிர அனைத்து உறுப்பினர்களின் சொத்து மதிப்புகளும் கோடிகளிலேயே உள்ளன.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சஷிகாந்த் ஷிண்டே (ரூ. 39.88 கோடி), அமோல் மிட்கரி (ரூ .1.17 கோடி), காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ் ரத்தோட் (ரூ .6.42 கோடி) ஆகியோரும் தங்கள் சொத்து மதிப்புகளை அறிவித்துள்ளனர்.
மேலும், இந்த ஒன்பது உறுப்பினர்களில் ஒருவர் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். ஐந்து பேர் பட்டதாரிகள், இருவர் பள்ளிப் படிப்பை மட்டும் நிறைவு செய்தவர்கள்.
இதுதவிர ஏழு உறுப்பினர்கள் தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அவர்களில் இருவர் மீது கொலை, வன்புணர்வு, கொலை முயற்சி போன்ற தீவிர வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும்’