மகாராஷ்டிராவின் வடக்கு எல்லை மாவட்டமான ஜல்கான், முக்தாய் நகரில் நடந்த விவசாயிகள் பேரணியில் மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார். இந்தப் பேரணியில் மூத்த தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவாரும் கலந்துகொண்டார்.
விவசாயிகள் பேரணி
பேரணியில் பேசிய உத்தவ் தாக்கரே, 'பாஜகவால் முடிந்தால் எங்களது கூட்டணி ஆட்சியை கலைத்துப் பார்க்கட்டும். மகாராஷ்டிராவில் ஏப்ரல் மாதத்துக்குள் தாமரை மலரும் என்று பாஜகவினர் கூறுகின்றனர்.
உங்களின் திட்டத்தை நான் அறிவேன். எங்களது மகாராஷ்டிரா விகாஷ் அகாதி (எம்.வி.ஏ.) கூட்டணி சாமானியர்களின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. சாமானியர்களின் வளர்ச்சியை நோக்கமாக கொண்டு பாடுபட்டு வருகிறோம்.
கட்டணமில்லாத மின்சாரம்
நாங்கள் (சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) பதவியேற்றதிலிருந்து, எங்களை விமர்சிப்பதை பாஜகவினர் வாடிக்கையாக கொண்டுள்ளீர்கள். எங்களது கூட்டணி வெகுநாட்கள் நீடிக்காது என நீங்கள் பேசிவருகிறீர்கள்.
சிவசேனா ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் விவசாயிகளின் கடனை தீர்ப்பதாக உறுதி அளித்தது. அந்த வகையில் விவசாயிகளுக்கு இரண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். அரசிடம் வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு தனிக்கடன் வழங்கப்படும். அதேபோல் விவசாயிகளுக்கு பகலிலும் கட்டணமில்லாத மின்சாரம் மற்றும் பாசன நீரை முழுமையாக வழங்குவது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சவால் ஏற்பு
நிச்சயமாக, விவசாயிகளின் பிரச்னைகளில் கவனம் செலுத்தி மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும். பாஜகவினர் எங்களது ஆட்சியை கலைத்துவிடுவதாக கூறுகின்றனர். எங்களுடன் திறமையான வழிகாட்டி சரத் பவார் உள்ளார்.
நான் பாலசாஹிப் தாக்கரேவின் மகன். உங்களது சவாலை ஏற்கிறேன். மக்களின் ஆசீர்வாதமும், திறமையான வழிகாட்டியும் எங்களுடன் உள்ளனர். முடிந்தால் எங்களது ஆட்சியை கவிழ்த்துப் பாருங்கள்' என விவசாயிகள் மற்றும் தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் மத்தியில் பேசினார்.
பாஜகவின் கோட்டை தகர்ப்பு
முக்தாய் நகர் தொகுதி பாஜக மூத்தத் தலைவர் ஏக்நாக் காட்ஸேவின் கோட்டையாக திகழ்ந்தது. பாஜக அரசாங்கத்தில் வருவாய் துறையை கவனித்துகொண்ட ஏக்நாத் மீது ஊழல் குற்றஞ்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவருக்கு தேர்தலில் போட்டியிட பாஜக சீட் கொடுக்கவில்லை.
மாறாக அந்த தொகுதியில் ஏக்நாத்தின் மகள் ரோகிணி பாஜக சார்பில் போட்டியிட்டார். அவர் சுயேச்சை வேட்பாளர் சந்திரகாந்த் நிம்பா பாட்டீலிடம் மோசமான தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏக்நாத், “சிவசேனா ஆட்சி விரைவில் கலையும், ஏப்ரலில் தாமரை மலரும்” என பேசியதாக செய்திகள் பரவின.
அரசியல் குழப்பம்
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, “முக்தாய் நகரில் இன்று பாஜக இல்லை. இதை அனைவரும் அறிவர். காட்ஸேவின் சொந்த ஊரிலே பாஜக இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது” என்றார்.
எல்கர் பரிஷத் வழக்கை தேசிய பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைப்பது தொடர்பாக கூட்டணி அரசில் பிணக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து மகாராஷ்டிராவில் திடீர் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
கூட்டணி ஆட்சி
மகாராஷ்டிராவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் ஆட்சியை பாஜகவினர் மூன்று சக்கர ஆட்சி என்று தொடர்ந்து கிண்டல் செய்துவருகின்றனர்.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் துணையுடன் கடந்த நவம்பர் மாதம் சிவசேனா ஆட்சிக்கு வந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க : 'இது எனது வெற்றியல்ல, டெல்லி மக்களின் வெற்றி': அரவிந்த் கெஜ்ரிவால்