மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்துவருகிறது. இதையடுத்து, இன்று காலை முதல் பெங்களூருவில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் அதனைக் கொண்டுவந்த மத்திய அரசைக் கண்டித்தும் கர்நாடக மாநிலம் மங்களூருவில் போராட்டம் நடைபெற்றது. காலை முதல் நடைபெற்ற இந்தப் போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியுள்ளது.
இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர காவல் துறையினர் கண்ணீர் குண்டுகளை வீசியுள்ளனர். இதில், போராட்டக்காரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதையறிந்த காவல் ஆணையர் மங்களூரு நகரத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.
போராட்டத்தில் இறந்தவர்கள் காவல் துறையின் தாக்குதலினால் இறந்தார்களா என்பது குறித்த முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை. இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த முழுமையான விசாரணைக்குப் பிறகே தகவல்கள் அறிவிக்கப்படும் எனக் காவல் துறையினர் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
மேலும் படிக்க: குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு!