பெங்களூரு: பெல்காம் மாவட்டத்திலிருக்கும் கோஹள்ளி கிராமத்தில் இரண்டு மாடி கட்டடம் பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது. இன்றளவும் இக்கிராமத்தில் இரண்டு மாடியில் ஒரு வீட்டைக் கூட நீங்கள் காணமுடியாது.
இந்தக் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலின் கலசத்தை விட உயரமான வீடுகள், வணிகக் கட்டடங்களை இவ்வூர் மக்கள் கட்டாததற்கு ஒரு பழங்கதை ஒன்றும் காரணம்.
காகோல் என்ற முனிவர் இந்தக் கிராமத்தில் நீண்ட காலம் தவம் செய்தார். அப்போது இந்தக் கிராமத்தின் பெயர் சிவபுரா என்றிருந்தது. அதனை ககோல் முனிவர் தான் கோஹள்ளி என்று பெயரிட்டு அழைத்தார்.
அந்தக் காலத்தில் ஒரு குடும்பம் இந்தக் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டி வாழ்ந்துள்ளனர். பல செல்வங்கள் இருந்தும் அவர்கள் வாழ்க்கையில் இன்னல்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்துள்ளது.
அதன் பின்னர் காகோல் முனிவர் இந்த வீட்டை தரைமட்டமாக இடித்து விட்டு எளிமையான வாழ்க்கையை வாழ அக்குடும்பத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார். வீடு தரைமட்டமானது, அவர்களின் வாழ்க்கையிலும் மீண்டும் வசந்தம் திரும்பியது.
சுமாராக 5 ஆயிரம் மக்கள் தொகையுடைய இவ்வூரில், பலருக்கும் விவசாயம் தான் பிரதான தொழிலாகவுள்ளது. இறைநம்பிக்கை அதிகமுடைய இவர்கள் ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலின் வளாகத்தின் திருமணம் செய்து கொள்வதில்லை. அப்படி செய்தால் தீங்கு ஏற்படும் எனவும் நம்புகின்றனர்.
இந்தக் கோயில் வெள்ளை நிறத்தில் மட்டுமே காலங்காலமாக வர்ணம் பூசப்பட்டு சமாதானத்தைப் பறைசாற்றி வருகிறது.
இந்த நவீன யுகத்திலும் செவி வழியாகக் கூறப்பட்ட கதையை நம்பி கோஹள்ளிவாசிகள், இரண்டு மாடியில் வீடு கட்டுவதைத் தவிர்த்து வருவது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.