இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, 'காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 4,396 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 143 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டு, 87 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் இந்த வைரஸ் தொற்று காரணமாக இருவர் இறந்துள்ள நிலையில், தற்போது 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வெளியூர்களிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளின்றி பொதுமக்கள் காரைக்கால் மாவட்டத்துக்குள் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
அதேசமயம், மாவட்ட எல்லைப் பகுதிகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, இ-பாஸ் முறை தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. பொது இடங்களில் கட்டாயம் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே கரோனா பரவலைத் தடுக்க முடியும்.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, மற்றும் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கிளை ஆகிய இரு இடங்களிலும் கரோனா பரிசோதனை மையம் அடுத்த வாரத்தில் அமைய உள்ளது. இதன்மூலம் கரோனா பரிசோதனை முடிவுகளை புதுச்சேரிக்கு அனுப்பி முடிவுக்காக காத்திருக்கும் நேரம் குறையும்.
இரு மையங்களிலும் சேர்த்து ஒரு நாளைக்கு 80 முதல் 90 மாதிரிகள் பரிசோதனை செய்ய முடியும். இதனால் பரிசோதனை முடிவுகளைக் காலதாமதமின்றி அறிந்து கொள்ளலாம். தற்போது 20 வென்டிலேட்டர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் பயன்பாட்டில் உள்ளது' என்றார்.