சத்திஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டம் அருகேயுள்ள பொடாலி கிராமத்தில் அமைக்கப்படும் சாலையை அழிக்க இரு நக்சலைட்டுகளுக்கு அவர்களது கூட்டாளிகள் உத்தரவிட்டுள்ளனர். இதை செயல்படுத்த மறுத்த காரணத்திற்காக அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை காப்பாற்ற முயன்ற கிராமத்தினர் சிலருக்கும் அடி உதை விழுந்துள்ளது என தண்டேவாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா தெரிவித்தார்.
மேலும் அவர், கொலை செய்யப்பட்டவர்கள் பஜ்ரங் வெட்டி, டிடோ மண்டாவி (பொடாலி கிராமம்) ஆகியோர் என அறிய முடிகிறது. இவர்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்கள். அரன்பூரிலிருந்து பொடாலி கிராமத்துக்கு சாலை அமைக்கப்படுவது நக்சல்களுக்கு பிடிக்கவில்லை. இந்த சாலையை அழிக்க இரண்டு நக்சல் தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், அதை பஜ்ரங்கும், மண்டாவியும் செயல்படுத்தவில்லை. இதுகுறித்து நக்சல் தலைவர்கள் கேட்டதற்கு, அந்த சாலை தங்கள் கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்ததோடு, சாலையை அழிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நக்சல் தலைவர்களும், அவர்கள் உடன் இருந்தவர்களும் பஜ்ரங் மற்றும் மண்டாவி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். அவர்களை காப்பாற்ற முயன்ற கிராமத்தினருக்கும் அடி விழுந்துள்ளது என கூறினார்.
கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காயமுற்ற கிராமவாசிகள் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.