காஷ்மீர் காவல் துறையினர் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இதுகுறித்து பேசிய காவல் துறையினர், “காஷ்மீரின் தெற்குப் பகுதியான புல்வாமா மாவட்டம் சேவா உலர் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவியதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியைச் சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பயங்கரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தியதால் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இரவு முழுவதும் தொடர்ந்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார் எனப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். இதையடுத்து இன்று காலை ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டார் எனத் தகவல் கிடைத்துள்ளது.
முன்னதாக, நேற்று (ஜூன் 25) பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் பராமுல்லா மாவட்டம் சோபேர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் இருவரைக் கைதுசெய்துள்ளோம்” எனக் கூறினர்.
ஜூன் 23ஆம் தேதி புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் இருவர் இறந்தனர். இதில் பாதுகாப்புப் படையினர் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வாரத்தில், ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த எட்டு பேரை பாதுகாப்புப் படையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.