கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு 50 நாள்களுக்கு மேலாக அமலில் உள்ளதால் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கே கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே சொந்த ஊரை விட்டு வெளி மாநிலங்களில் வேலை செய்யும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனால் ரயில், பேருந்துகள் வசதியின்றி தொழிலாளர்கள் பலரும் தங்களின் குடும்பங்களுடன் நடைபயணமாகச் சொந்த ஊருக்கு நடக்கத் தொடங்கினர். அதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரயில் பாதை வழியாக சொந்த ஊருக்குத் திரும்பியவர்கள் மீது சரக்கு ரயில் ஏறி 16 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.
இதனிடையே, தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப மத்திய அரசு சிறப்பு ரயில்கள் சேவையைத் தொடங்கியது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் இன்று காலை நடைபயணமாக சொந்த ஊருக்குச் சென்றவர்கள் மீது ட்ரெக் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். காயமடைந்த 14 பேர் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குடிபெயர்ந்த தொழிலாளர்களின் தொடர் உயிரிழப்புகள் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: மும்பையில் வடமாநில தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி!