கோவா அரசியல் குழப்பம்
கோவாவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் உள்ளது. அம்மாநில முதலமைச்சராக இருந்த மனோகர் பரிக்கரின் மறைவுக்குப் பிறகு அங்கு குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆளும் பாஜகவிற்கு 12 எம்எல்ஏக்கள் உள்ளனர். 14 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் தனிப் பெருங்கட்சியாக உள்ளது. இதனைக் காரணம் காட்டி தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு இரண்டு முறை கடிதம் கொடுத்தது காங்கிரஸ்.
கோவா கூட்டணி
36 உறுப்பினர்கள் கொண்ட அம்மாநிலத்தில் மஹாராஷ்டிரவாதி கோமந்தக்கட்சி (எம்ஜிபி), கோவா முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா 3 உறுப்பினர்கள் மற்றும் 3 சுயேட்ச்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில் மஹாராஷ்டிரா கோமன்டக் கட்சியைச் சேர்ந்த மனோகர் அஜ்கோன்கர் (Manohar Ajgaonkar) தீபக் பாஷ்கர் (Deepak Pauskar) ஆகிய இரண்டு எம்எல்ஏக்கள் தங்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அம்மாநில துணை சபாநாயகர் மைக்கேல் லேபோவை நேற்று பின்னிரவு 1.45 மணிக்கு சந்தித்து அதற்கான கடிதத்தை அளித்துள்ளனர். இதன்மூலம் பாஜக எம்எல்ஏக்களின் பலம்14 ஆக அதிகரித்துள்ளது.
ஏன் இந்த மாற்றம்?
பேரவை வளாகத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய அஜ்கோன்கர், எம்ஜிபி கட்சியின் முடிவு எடுக்கும் விவகாரங்களில் தாங்கள் இருவரும் தள்ளி வைக்கப்பட்டதாகவும், அதனால்தான் இந்த முடிவைஎடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், மஹாராஷ்டிரவாதி கோமந்தக்கட்சித்தலைவர் சுதின் தவலிக்கரின் சகோதரர் தீபக் தவலிக்கர் பாஜவிற்கு எதிராக அம்மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டுவதாகவும் இதனால் இரு கட்சிகளிடையே சுமுகமான போக்கு இல்லாததாகவும் கூறப்படுகிறது.
அமைச்சரவையில் மாற்றம்
கடந்த மார்ச் 19 ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மஹாராஷ்டிரவாதி கோமந்தக்கட்சித் தலைவர் சுதின் தவலிக்கர் மற்றும் மற்றொரு எம்எல்ஏ அஜ்கோன்கர் ஆகிய இருவர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். தற்போது புதிதாக கட்சியில் இணைந்துள்ள தீபக் பாஷ்கருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. தற்போது தீபக் பாஷ்கருக்கு அமைச்சரவை பதவி வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் தவலிக்கரின் பதவி பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கூட்டணி கட்சிகளுக்கு ஆபத்தானது பாஜக
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், பாஜக தனது கூட்டணி கட்சிகளுக்கே ஆபத்தானது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் தங்கள் இருப்பே கேள்விக்குறியாகிவிடும் என்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் உணர வேண்டும் என தெரிவித்துள்ளது.