முத்தலாக் சட்டத்திருத்த மசோதா 2018, மற்றும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019 மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையானது தற்போது உள்ள முத்தாலக் சட்டத்தால் பாதிப்புக்குள்ளாவதை தடுக்கவே இச்சட்டதிருத்தம் கொண்டுவரப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருந்தார். கடந்த டிசம்பர் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவாக 245 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் கிடைத்தன.
அதேபோல கடந்த ஜனவரி மாதம் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள குடியுரிமை சட்டத்தை திருத்தம் செய்து மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத் திருத்தத்தின் படி வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் முஸ்லீம் அல்லாத பிரிவினருக்கு வடகிழக்கு மாநிலத்தில் குடியுரிமை பெற வழி வகை செய்யப்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்திருந்தார்.
ஆனால் எதிர்கட்சிகள் அனைவரும் இந்த இரு மசோதாக்களுக்கும் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முத்தலாக் திருத்தத்திற்கு இஸ்லாமிய அமைப்புகளும், குடியுரிமை சட்டத்துக்கு வடகிழக்கு மாநில மக்களும் தீவிர எதிர்ப்பும் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
பெரும்பான்மையில் உள்ளதால் ஆளும் பாஜக அரசு மக்களவையில் மசோதாவை எளிதாக நிறைவேற்றியது. ஆனால் மாநிலங்களவையில் அச்சூழல் இல்லாததால் இவற்றை பாஜக அரசு நிறைவேற்றுவது கடினம் என கருதப்படுகிறது. மேலும் இன்றே கூட்டத்தொடரின் இறுதி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.