கடந்த ஒரு மாத காலமாகவே இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவிவருகிறது. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவரும் நிலையில், அதற்கு இந்தியா தக்க பதிலடி தந்துவருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் பணியாற்றிவரும் இந்திய தூதரக அலுவலர்களில் இருவர் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் அரசிடம் இந்தியா விளக்கம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமாபாத்தில் பணியிலிருக்கும்போது மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு ஓட்டுநர்கள் மாயமாகியுள்ளனர்.
இது குறித்து இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "இன்று காலையிலிருந்து இருவர் காணவில்லை. பாகிஸ்தானின் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளோம்" என்றார்.
பாகிஸ்தானின் இரண்டு தூதரக அலுவலர்களை உளவுபார்த்த காரணத்தை முன்னிறுத்தி இந்தியா பணி நீக்கம் செய்தது. இதற்கும், இந்திய தூதரக அலுவலர்கள் காணாமல் போனதற்கும் தொடர்புள்ளதா எனப் பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இதையும் படிங்க: எளிமையாக நடைபெற்ற கேரள முதலமைச்சர் வீட்டு திருமணம்