ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நூதன முறையில் ஏடிஎம் கொள்ளை நடைபெறுவதாக அனைத்து வங்கியிலிருந்தும் புகார்கள் வந்தன. இதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்த காவல் துறையினர், ஏடிஎம் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
தொடர்ந்து, ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, காவல் துறையினர் குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில், விசாகப்பட்டினம் கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த இருவரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
இதையடுத்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் ஹரியானாவைச் சேர்ந்த அகிப் கான் (27), முபாரக் (21) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் ஜூலை முதல் வாரத்தில் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் தரையிறங்கி, அருகிலுள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ஆள் நடமாட்டம் இல்லாத ஏடிஎம் இயந்திரத்திற்கு செல்லும் இருவரும், ஏடிஎம் முன் பெட்டியின் பூட்டை நகல் சாவி போட்டு திறக்கின்றனர்.
பின்னர், ஏடிஎம் இயந்திரத்தில் அவர்கள் கொண்டுவந்துள்ள கார்டை செருகிய பின் வழக்கம்போல் பணம் எடுக்கின்றனர். ஆனால், பணம் வெளியே வரும் நேரத்தில் மின் வயர்களை துண்டித்துவிட்டால் பணம் வெளியே வந்துவிடும், இருப்பினும் பரிவர்த்தனை தோல்வியடைந்தது (Transaction Failed) என குறுஞ்செய்தி வந்ததும் அவர்கள் எடுத்த பணமும் திரும்ப வங்கி கணக்கில் சென்றுவிடும்.
இந்த நூதன முறையை பயன்படுத்தி பல ஏடிஎம் இயந்திரங்களில் பணம் மோசடி செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்களிடமிருந்து 76ஆயிரம் ரூபாய் ரொக்கம், 34 ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஸ்கிம்மர்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.