தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மூன்றாவது முறையாக மே.17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் குறைவான பகுதிகளில், ஊரடங்கில் இருந்து சிலவற்றுக்குத் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர, மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், மதுப் பிரியர்களின் சொர்க்க வாசலாக திகழும் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்காததால், திக்குமுக்காடிய புதுச்சேரி குடிமகன்கள் தமிழ்நாடு எல்லைப் பகுதியிலுள்ள மதுக்கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி பகுதியான திருக்கனூர் எல்லையில், அம்மாநில காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில், தமிழ்நாட்டிலிருந்து மதுவாங்கி வந்த இருவரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில், விழுப்புரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்கள் வாங்கி வந்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.
வழக்கமாக, புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை கடத்துவது தான் தலைப்புச் செய்தியாக மாறும். ஆனால், தற்போது பரவிவரும் கரோனாவால் வரலாற்றை மாற்றியிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக, மே.7 ஆம் தேதி திறக்கப்பட்ட மதுபானக் கடைகளில், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காததால், நீதிமன்றம் மதுபானக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மதுபானம் திருட முயன்ற இளைஞர்: பொதுமக்களை கண்டு தப்பியோட்டம்