புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் காவல்துறை தலைமையகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அனைத்து காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்த காவல்துறை டிஜிபி பாலாஜி உத்தரவிட்டார்.
அதன்பேரில், புதுச்சேரி முத்தியால்பேட்டை தனியார் பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் அங்கு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது நைனார் மண்டபம் பகுதியில் பள்ளி மாணவர் ஒருவரிடம், கஞ்சா விற்க வந்த அடையாளம் தெரியாத நபரை காவல் துறையினர் பிடித்தனர்.
மேலும், அவரிடமிருந்து 210 கிராம் எடையுள்ள கஞ்சா பொருள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், முதலியார்பேட்டை சுந்தர்ராஜ் தெருவைச் சேர்ந்த ஜோதி என்பதும் இவருக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் என்பவர் கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்த 75 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.