காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து அண்மையில் நீக்கப்பட்டது. குறிப்பாக ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் இந்தியாவுடனான தூதரக, வணிக உறவுகளை முறித்துக்கொண்டது. தொடர்ந்து, காஷ்மீர் பிரச்னையைச் சர்வதேசப் பிரச்னையாக்கும் முயற்சியில் தீவரமாக ஈடுபட்டுவருகிறது.
இதனிடையே, காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் ஐநாவுக்கு எழுதியதாகச் சொல்லப்படும் ஒரு கடிதத்தில், "....இந்தியாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி, காஷ்மீரில் நிலைமை மோசமாகவுள்ளதாகவும், அங்கு இறப்புகள் நிகழ்ந்துவருவதாகவும் கூறியிருக்கிறார்..." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் பேச்சைப் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்துவதாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக ராகுல் காந்தி பேசிவருகிறார் என்றும் அவரை ட்விட்டரில் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
இதுதொடர்பான #RahulShamesIndia, #RahulGandhiBacksPakistan என்னும் ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.