புதுச்சேரியின் காங்கிரஸ் முகமாக இருந்து வந்தவர் நமச்சிவாயம். கடந்த 2016ஆம் ஆண்டு, சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதை தொடர்ந்து, முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியை முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட தலைவர்கள் அறிவித்தனர்.
இதனால், நமச்சிவாயம் அதிருப்தி அடைந்தார். இருப்பினும், அமைச்சரவையில் இரண்டாவது இடத்தை கொடுத்து காங்கிரஸ் உயர் மட்டம் அவரை சமாதானப்படுத்தியது. அதுமட்டுமின்றி, காங்கிரஸ் மாநில தலைவர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.
இதனிடையே, சமீபத்தில் தலைவர் பதவியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதனால், பெரும் அதிருப்தி அடைந்த அவர் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இதற்கிடையே, பாஜகவில் அவர் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியையும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். நமச்சிவாயத்திற்கு ஆதரவாக ஊசுடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தீப்பாஞ்சானும் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், ஜெயக்குமார் ஆகியோர் டெல்லியில் பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தனர். பின்னர், அவர்கள் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்தித்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
ஏப்ரல், மே மாதத்தில் புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கட்சி தாவும் நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக நமச்சிவாயம் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.