தற்போது, அஸ்ஸாம் மாநிலம் தேஸ்பூரிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதி 350 கி.மீ. தூரத்தில் உள்ளது. இருப்பினும், தவாங்கை அடைய கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,170 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பனிமூடிய சேலா கணவாயைக் கடந்துசெல்ல வேண்டும்.
சேலா கணவாயில் ஏற்படும் கடுமையான பனிப்பொழிவு இந்திய ராணுவத்திற்கும், பொதுமக்களுக்கும் தவாங் பயணத்தைக் கடினமாக்குகிறது. எனவே, இதனை எளிமையாக்கு வகையில் சேலா கணவாயின் கீழே இரண்டு சுரங்கங்கள் கட்டப்பட்டுவருகின்றன. இதனால் கணவாயில் ஏற்படும் பனிபொழிவால் தடைபடும் பயணம் எளிதாகிறது.
எனவே, போர்க்கால அடிப்படையில் இரண்டு சுரங்கப்பாதைகளின் கட்டுமானத்தை முடிக்க எல்லை சாலைகள் அமைப்பு தீவிரமாக பணிகளை மேற்கொண்டுவருகிறது. இந்தச் சாலையானது, இந்திய ராணுவத்திற்கு நாட்டின் கிழக்கு எல்லையை அடைய அனைத்து வகையிலும் உதவும் எனப் பாதுகாப்பு அலுவலர்களால் நம்பப்படுகிறது.
மேலும் இது தவாங்கிற்கு நீண்ட நேரமெடுக்கும் பயணத்தை சில மணிநேரங்களாகப் பயண தூரத்தை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பயண தூரத்தை குறைந்தது 10 கி.மீ. முதல் 15 கி.மீ. வரை குறைக்கிறது.
இந்தக் கட்டுமான பணிகள் குறித்து எல்லைச் சாலைகள் அமைப்பு அலுவலர்கள் கூறுகையில், “கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. சுரங்கங்களின் சுற்றளவு 475 மீட்டர், 1790 மீட்டர் இருக்கும். சுரங்க கட்டுமானம் முடிந்தவுடன் இந்த இரு சுரங்கங்களும் பொதுமக்களுக்கும், ஆயுதப்படைகளுக்கும் பயன்படுத்த திறக்கப்படும்.

தகவல் தொடர்பு உதவிகளும் சேலா கணவாய் வழியாகத் தொடரும். சுரங்கப்பாதையின் உள்ளே பயணிக்கும் வாகனங்களுக்கான வேக வரம்பு ஒரு மணி நேரத்திற்கு 80 கி.மீ. ஆக நிர்ணயிக்கப்படும்.
சுரங்கங்களுக்குள் 8 வென்ட்டிலேட்டர்கள் நிறுவப்படும். அவசரகால சூழ்நிலைகளில் பயன்படுத்த சுரங்கங்களுக்குள் அவசர தொலைபேசி சேவைகளும் நிறுவப்படும்” என்று கூறினார்.
இதையும் படிங்க : கரோனா காலத்தில் பரவும் இஸ்லாமிய வெறுப்புவாத நோய்!