நாடாளுமன்றத் தேர்தல் தமிழக இடைத்தேர்தலுக்கு குக்கர் சின்னை பொது சின்னமாக ஒதுக்கக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இதுவரை பதிவு செய்யப்படாததால் சுயேட்சையாகவே கருதுவதாகவும், இதனால் பொதுச்சின்னம் கொடுக்க முடியாது என்றும், தனித்தனி சின்னம் தான் ஒதுக்க முடியும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபில், அபிஷேக், மனு சிங்வி, ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் ஆஜராகி இதுதொடர்பான வழக்கில் குக்கர் சின்னம் வழங்க நீதிபதி கன்வில்கர் ஏற்கனவே கூறியிருந்தபோது அதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் மறுசீராய்வு மனுதாக்கல் நாளை (இன்று) மதியம் 3மணிக்கு முடிவடைகிறது என்பதால் இதுகுறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும். என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து குக்கர் சின்னம் கொடுக்க முடியாது என்பதற்கு எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் எங்கே? எனத் தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆனால் ஆவணங்கள் இல்லை எனத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால், முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் ஆவணங்கள் கூட தயார் செய்யாமல் இருப்பது ஏன்? என்பது உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் நாளை காலை முதல் வழக்காக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் எனக்கூறி ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று மாலை 300 பக்கம் கொண்ட பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில். இரட்டை இலை பற்றி மூலவழக்கு நிலுவையில் இருந்தபோது டெல்லி உயர்நீதிமன்றம் குக்கர் சின்னம் ஒதுக்கியது போன்று, உச்சநீதிமன்றமும் இடைக்காலமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு பதிவு செய்யப்படாத கட்சிக்கு இடைக்காலமாக குக்கர் சின்னம் வழங்கியது பிரநிதித்துவ சட்டப்படி முரணானது, பதிவு செய்யப்படாத கட்சிக்கு எப்படி பொதுச்சின்னத்தை ஒதுக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தயார், ஆனால் இப்போது நேரம் இல்லை என டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் பதிலளித்தனர். பின்னர் நீதிபதிகள் பதிவு செய்யப்படாத கட்சிக்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என்றும், பொதுச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்வதாகவும், பொதுச்சின்னம் ஒதுக்கினாலும் அமமுக வேட்பாளர்கள் சுயேட்சையாகவே கருதப்படுவார்கள் என தீர்ப்பளித்தனர்.