சந்திரபாபு நாயுடு ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்தை நிர்வகிக்க 16 பேர் உறுப்பினர்கள் கொண்ட அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது. அதன்பின், புதிதாக ஆட்சியமைத்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு இந்த அறங்காவலர் குழுவை கலைத்தது. மேலும், சுப்பா ரெட்டியை அறங்காவலர் குழு தலைவராகவும் நியமித்தது.
இந்நிலையில், அறங்காவலர் குழுவில் புதிதாக 24 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆந்திர அறநிலையத்துறை தலைமைச் செயலர், அறநிலையத் துறை கமிஷனர், தேவஸ்தான செயல் அலுவலர், திருப்பதி நகர்ப்புற வளர்ச்சி கழக தலைவர் ஆகியோரும் அறங்காவல் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 28 பேர் அடங்கிய இக்குழுவில் ஆந்திராவிலிருந்து எட்டு பேரும், தெலங்கானாவிலிருந்து ஏழு பேரும், தமிழ்நாட்டிலிருந்து நான்கு பேரும், கர்நாடாகாவிலிருந்து மூன்று பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மஹாராஷ்டிரா, டெல்லி ஆகிய இரு மாநிலங்களிலிருந்து தலா ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், டாக்டர் நிச்சிதா, உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு, வைத்தியநாதன் ஆகியோரும் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.