ஊதிய உயர்வு, போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்கவேண்டும் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானாவில் கடந்த மாதம் 5ஆம் தேதியிலிருந்து போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்து ஊழியர்கள் நவ.5ஆம் தேதி மாலைக்குள் (இன்று) பணிக்கு திரும்பவேண்டும். இல்லையென்றால் நிரந்தரமாக வேலையை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக்குழு தலைவர் அஸ்வதம ரெட்டி பேசுகையில், ’முதலமைச்சர் சந்திரசேகர ராவின் உத்தரவை ஏற்கமாட்டோம். போக்குவரத்து ஊழியர்கள் யாரும் நவ.5ஆம் தேதி மாலைக்குள் பணிக்கு திரும்பமாட்டோம். கோரிக்கை நிறைவேறும்வரை தொழிலாளர்களின் போராட்டம் தொடரும்.
தற்போது பணிக்கு திரும்பிய ஓட்டுநர்கள், நடத்துநர்களையும் போராட்டத்திற்கு அழைக்கிறோம். அரசு பேருந்து கழகத்தின் ஒவ்வொரு டிப்போவின் முன்னாலும் போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் போராடுவார்கள்’ என்றார்.
மேலும், தொழிலாளர்கள் சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் முகமது அலி பேசுகையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தை நடத்துவோம் என்றார்.
இதையும் படிங்க: டீ, காபி குடிக்கும் கப்பை இனி சாப்பிடலாம்!