சம்பள உயர்வு, போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியர்களாக மாற்றுவது, ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட 26 கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 5ஆம் தேதி முதல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசு குறித்த நாட்களுக்குள் பணிக்கு திரும்பாததால், தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் கிட்டதட்ட 50 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களை வேலையில் இருந்து அதிரடியாக நீக்கினார்.
இதையடுத்து போராட்டக்காரர்களின் நடவடிக்கை தீவிரமானது. இந்நிலையில் போராட்டக்காரர்களின் வேலை நீக்கம் குறித்து பேசிய மாநில முதலமைச்சர், போக்குவரத்து கழகத்தில் இருக்கும் ஊழியர்கள் வெறும் 1200 பேர் மட்டுமே. எனவே மற்ற ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய அரசுக்குத் தேவை ஏற்படவில்லை. அவர்கள் அரசு நிர்ணயித்த கெடுவுக்குள் பணிக்கு திரும்பாததால், அவர்களாக வேலையிலிருந்து வெளியேறியதாகக் கருதப்படும். எந்தவொரு சூழ்நிலையிலும் போக்குவரத்து கழகம் அரசுடன் இணைக்கப்படாது என்றார்.
வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பேருந்துகள் இயக்கப்படுவதற்கு இடையூறு ஏற்படுத்தாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு சார்பாக கூறப்பட்டுள்ளது.
இன்று வரை தெலங்கானா போக்குவரத்து கழகத்தில் மொத்தமாக 10, 400 பேருந்துகள் உள்ளன. அதில் 5,200 பேருந்துகள் அரசுக்குச் சொந்தமானவை. 3100 பேருந்துகள் போக்குவரத்து கழகத்திற்காக வாடகைக்கு எடுக்கப்பட்டு, அரசு நிர்வாகத்தின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 2100 பேருந்துகள் முற்றிலும் தனியாருக்குச் சொந்தமானவை.
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், விடுமுறை தினத்தில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதற்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த அரசு சார்பாக யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: ஈராக் பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் 2 பேர் உயிரிழப்பு - ஏராளமானோர் காயம்!