அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் பிப்ரவரி மாதம் இந்தியா வரவுள்ளதாகவும் அதற்கான தேதிகள் குறித்து இரு நாடுகளும் ஆலோசித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்றபின் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதன்முறையாக அமையும்.
இந்த வருகையின் போது இரு நாடுகளுக்கிடையே நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அண்மையில் அமெரிக்கா விலக்கிக்கொண்ட ஜி.எஸ்.பி(G.S.P) சிறப்பு அந்தஸ்தை ட்ரம்ப் மீண்டும் வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா கடந்த ஆண்டே குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை அழைத்திருந்தது. பயணத் திட்டம் ஒத்துவராத காரணத்தால் ட்ரம்ப் வர இயலவில்லை. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தின்போது நடைபெற்ற 'ஹவுடி மோடி' விழாவில் பங்கேற்ற ட்ரம்பிடம் இந்தியா வருமாறு மோடி கேட்டுக்கொண்டார். ட்ரம்பும் அவரிடம் விரைவில் இந்தியா வருவேன் என்ற உறுதியை அளித்தார். இதன் தொடர்ச்சியாகவே ட்ரம்பின் இந்திய வருகை தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: கிரிக்கெட் வீராங்கனையாக அவதாரம் எடுக்கும் அனுஷ்கா ஷர்மா