அமெரிக்க அதிபராக மூன்றாண்டுகளுக்கு முன்பு பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், முதன்முறையாக இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது நாட்டில் பதவி நீக்க பிரச்னையை சந்தித்துவரும் டிரம்ப், பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019இல் வராத டிரம்ப்
இதற்கு முன் அதிபராக இருந்த ஒபாமா, தான் பதவி வகித்த எட்டு ஆண்டுகளில் 2010, 2015 ஆகிய இருமுறை இந்தியா வந்துள்ளார். 2019ஆம் ஆண்டு குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக டிரம்ப் அழைக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளை மாளிகையின் முக்கிய அலுவல் தேதியுடன் அந்தத் தேதியும் ஒன்றாக வந்ததால் டிரம்ப் வரவில்லை.
டிரம்பும் மோடியும் ராஜாங்க ரீதியாக பலமுறை சந்தித்துள்ள நிலையில், கடைசியாக 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் சந்தித்தனர்.
ஹவுடி மோடி
ஐநா சபை கூட்டத்தின் இரு நாள்களுக்கு முன்னர் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடைபெற்ற 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் மோடியும் டிரம்பும் ஒன்றாகப் பங்கேற்றனர். காஷ்மீரில் நிலவிவரும் சூழல் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக ஐயத்தை முன்வைத்துவருகின்றனர்.
குறிப்பாக, முக்கிய எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர் காஷ்மீர் அரசியல் தலைவர்கள் கைது, தகவல்தொடர்பு தடைகள் குறித்து தொடர்ச்சியாகக் கேள்விகளை முன்வைத்தனர்.
வர்த்தக ஒப்பந்தம்?
அத்துடன் அண்மையில், ஈரான் அமெரிக்காவுக்கிடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம், வளைகுடா நாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியாவுக்கு மறைமுக பாதிப்பை ஏற்படுத்தும்.
டிரம்பின் இந்திய வருகை அரசியல் சார்ந்த முக்கிய நகர்வாகப் பார்க்கப்பட்டாலும், இரு நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகள் அமைச்சகங்களின் பேச்சுவார்த்தை மூலம் உருபெற்றுவருகின்றன. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்பது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: டிக்டாக் செயலியை ஓரங்கட்டுமா ஃபேஸ்புக்கின் லஸ்ஸோ!