சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி, "உலகமே கரோனா வைரஸ் பாதிப்பால் மோசமாகியுள்ளது. ஆனால் அதைவிட மோடியின் மனமும், இதயமும் மோசமானது. காஷ்மீரில் ஏழு லட்சம் ராணுவத்தினரை மோடி குவித்துள்ளார்” என பேசினார்.
இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்களான கவுதம் கம்பிர், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அஃப்ரிடி தெரிவித்த கருத்துக்கு உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ஆன்ந்த் ஸ்வரூப் ஷுக்லா தக்க பதிலடி தந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி விரைவில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும். மேலும் அங்கு நாட்டின் மூவர்ணக்கொடி ஏற்றப்படும். இந்தியாவைப் பற்றி மோசமாக பேசுபவர்களுக்கும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டுபவர்களையும் எங்கள் ராணுவத்தினர் அழித்துள்ளனர்.
இந்தியாவை பலவீனப்படுத்த முயற்சிக்கும் அஃப்ரிடி போன்றவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, ஒன்றே ஒன்றுதான். இது மோடியின் ஆட்சி. அவரது ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வேரோடு அழித்துள்ளோம். உலகத்தில் அமைதியை நிலைநாட்ட உலக வரைப்படத்திலிருந்து பாகிஸ்தான் அகற்றப்படும். அதற்கான நேரம் வந்துவிட்டது" என்றார்.
இதையும் படிங்க: மோடி இருக்கும்வரை இந்தியா - பாக் உறவில் முன்னேற்றம் இருக்காது - அப்ரிடி