கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கித்தவித்துவருகின்றன. இந்நிலையில், அட்டவணைப்படி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், பயணிகள், புறநகர் உள்ளிட்ட ரயில் சேவைகள் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 12 வரை முன்பதிவு செய்யப்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவுக்கான கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் எனவும், ஊரடங்கு காலத்தில் இயக்கப்பட்ட 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14 மற்றும் அதற்கு முன்பாகப் பதிவுசெய்யப்பட்ட ரயில்களுக்கான கட்டணத்தை முழுவதுமாகத் திருப்பி கொடுக்க ரயில்வே வாரியம் இந்த வாரம் முடிவுசெய்தது. ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட ரயில்களுக்கான கட்டணமும் திருப்பி கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.