இந்திய தொழிற்சங்கங்களின் மையம், இந்திய தேசிய காங்கிரஸ் தொழிற்சங்கம் உள்ளிட்ட பத்து தொழிற்சங்கங்கள் அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை எதிர்க்கும் விதமாக ஜூலை 3ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், ஜூலை 3ஆம் தேதி நடைபெறவிருக்கிற எதிர்ப்பு தினத்தை வெற்றி பெற வைக்க அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜூலை 3ஆம் தேதிக்கு பின்பு ஒத்துழையாமை உள்ளிட்ட உறுதியான போரட்ட வடிவங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள், நீண்ட காலமாக நடத்தப்படாமல் உள்ள இந்திய தொழிலாளர் மாநாட்டை நடத்த அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
"தொழிலாளர் நலச்சட்டங்களை நீர்த்துப்போக செய்து அடிமைகளாக தொழிலாளர்களை நடத்துவதை அனுமதிக்க முடியாது. பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாரிடம் ஒப்படைப்பதையும் அனுமதிக்க முடியாது. இந்த ஊரடங்கால் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்பட 24 கோடி மக்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கு அறிவித்த தொகுப்பு ஒரு மோசடி.
மோடி அரசு ஏழை மக்களுக்கு என எதுவும் செய்யவில்லை. பணக்காரர்களின் நலனை மட்டுமே பாஜக கருத்தில் கொள்கிறது" என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.