பிரான்ஸ் நாட்டிலிருந்து, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சுற்றுலா வந்தவர்களில் 134 பயணிகள் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்தனர். இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பிரான்ஸ் நாட்டுப் பயணிகள் புதுச்சேரியில் சிக்கித் தவித்தனர். இதுகுறித்து புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று முறையிட்டனர். மேலும் அதற்கான ஏற்பாடுகளை செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இவர்களில் சிலருக்கு விசா காலம் முடிகிறது. சிலருக்கு பயணசீட்டும் காலாவதி ஆகிவிட்டது. சிலரிடம் போதியப் பணமில்லை. பணம் இல்லாதவர்களுக்கு பிரான்ஸ் தூதரகம் உறுதிமொழி ஆவணம் பெற்றுக்கொண்டு, சொந்த ஊர் திரும்புவதற்கான டிக்கெட் ஏற்பாடு செய்தது. இவர்கள் தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து பிரான்சுக்குச் செல்கின்றனர். இதற்காக புதுச்சேரி உள்ள பிரான்ஸ் நாட்டு தூதரகம் சார்பில், நான்கு பேருந்துகள் சென்னை செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு கரோனா நோய் அறிகுறி உள்ளனவா என பரிசோதனை செய்யப்பட்டு, வழி அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதரகம் செய்துள்ளது.