நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், பொது இடங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா வழிகாட்டுதல்களைக் கடுமையாக அமல்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் ஆலோசனை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரோனா விதிமீறல்கள் குறித்து வேதனைத் தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் அதற்கான கட்டமைப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற விசாரணையில் நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். தேசியத் தலைநகர் டெல்லியில் அதிகரித்துவரும் கரோனாவால் சூழல் மோசமடைந்துள்ளதாகவும், குஜராத்தில் நிலைமை கைமீறி சென்றுவிட்டதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் சிகிச்சை முறை குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.