டெல்லி: வேளாண் துறை முதல் விண்வெளி துறை வரை இன்று தொடக்க நிலை நிறுவனங்களாக உள்ள நிறுவனங்கள் வரும் காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களாக உருவெடுக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐஐஎம்-சாபல்பூரின் வளாகத்திற்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டிய பின் பேசிய அவர், " வேளாண் முதல் விண்வெளி துறை வரை தொழில் முனை நிறுவனங்களுக்கான வாய்ப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.
இன்றைய தொடக்க நிலை நிறுவனங்கள் நாளைய பன்னாட்டு நிறுவனங்களாகும். இந்தியாவின் மேம்பாட்டில் இளைஞர்களுக்கான பங்கு மிகப்பெரியது.
சாம்பல்பூரில் அமையவுள்ள இந்த ஐஐஎம் வளாகம், ஒடிசாவின் சிறந்த வரலாற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக இருக்கும். 2014ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 13 ஐஐஎம்கள் இருந்தன.
இன்று நாடு முழுவதும் 20 ஐஐஎம்கள் உள்ளன. இவ்வாறு திறன் வாய்ந்த நிறுவனங்கள் உருவெடுப்பதன் மூலம் தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நாம் அடையமுடியும்" என்றார்.
"ஐஐஎம் சாம்பல்பூர் வளாகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த ஐந்த ஆண்டுகளில் இந்த வளாகம் மூலம் மாநிலத்தின் கல்வித்துறையில் நேர்மறையான தாக்கம் உண்டாகும்" என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இஸ்ரோவின் பத்தாண்டு திட்டம்!