இன்றைய உலகத்தை விரல் நுனியில் கொண்டு வந்த கூகுள் உலவியின் பிரத்யேகமான அம்சம் டூடுல். உலகின் பிரபல மனிதர்களின் பிறந்த நாட்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்கள், உலக நாடுகளின் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகை தினங்கள், சமகால நிகழ்வுகள் என அனைத்தையும் தனது டூடுல்களின் மூலம் கௌரவப்படுத்துகிறது டூடுல்.
நெட்டிசன்களைக் கவர்ந்திழுக்கும் இந்த டூடுல்கள் சில சமயம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாவதுண்டு. எத்தனை முறை கூகுள் உலவியை உபயோகப்படுத்தினாலும், டூடுல் ஒரு பரவசத்தை உண்டு பண்ண தான் செய்கிறது. இதுவும் கிட்டத்தட்ட ஒரு தகவல் களஞ்சியம் போன்றதுதான். உலகில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தனை தகவல்களையும் தனது டூடுல்களின் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு மின்னல் வேகத்தில் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டி, நொடிப்பொழுதில் அவர்களுக்கு கூகுள் தெரிவித்துவிடுகிறது.
இத்தனை சிறப்பு மிக்க கூகுள், நிலவில் கால் பதித்த நாளை டூடுல் மூலம் கவுரப்படுத்தியிருக்கிறது. சென்ற நூற்றாண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக 1969 ஆம் ஆண்டின் ஜூலை 21ஆம் தேதியை வரலாற்று அறிஞர்கள் கொண்டாடுகின்றனர்.
நிலவில் கால் பதித்த நாளின் வரலாறு மிகவும் சுவாரசியமானது. ஆம், 1969ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 16ஆம் தேதி, அப்பல்லோ 11 என்ற விண்வௌி ஓடத்தை அமெரிக்கா ஏவியபோது, அதில் நிலவில் இறங்கும் திட்டத்தில் கட்டளை அதிகாரியாக நீல் ஆம்ஸ்ட்ராங், கட்டளை விமானி மைக்கேல் காலின்ஸ், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் சென்றனர்.
நான்கு நாள்கள் பயணம் செய்த அந்த விண்வௌி ஓடம், அதே ஆண்டு ஜூலை 20ஆம் தேதி சந்திரனில் இறங்கியது. நிலவில் இறங்கும் இந்தத் திட்டத்தில் கட்டளை அதிகாரியாக நீல் ஆம்ஸ்ட்ராங்கும், கட்டளை விமானியாக மைக்கேல் காலின்சும், எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர். மைக்கேல் காலின்ஸ் விண்வெளி ஓடத்திலேயே தங்கிக்கொண்டார். நீல் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் 'ஈகிள்' எனும் சிறிய ரக ஓடத்தில் சந்திரனில் ஜூலை 20 அன்று இறங்கினர்.
பின்னர் 6 மணி நேர தாமதத்துக்குப் பிறகு ஜூலை 21ஆம் நாள், நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்ததன் மூலம் நிலவுக்குச் சென்ற முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார். அதுவரை குழந்தைகளுக்கு கதை சொல்ல, காதலர்கள் கவிதை எழுத என, மனித வாழ்வியலில் பின்னிப் பிணைந்த நிலவினை மனித குலம் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்த நிகழ்வினைக் கேட்டுப் பரவசமடைந்தது.
கிட்டத்தட்ட நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதனை நினைவுக் கூறும் வகையில், விண்வெளி வீரர் விண்வெளியில் கால் பதித்த புகைப்படத்துடன் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. இந்த கூகுள் டூடுலை நெட்டிசன்கள் கிளிக்கினால் நிலவில் கால் பதித்த நாளின் வரலாற்றைக் கூறும் காணொளியும் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.