புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பெங்களூரூ,ஹைதராபாத்திற்கு தினசரி விமான சேவையை இயக்கிவருகிறது. சுற்றுலா மற்றும் தொழில் வளத்தை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரியில் இருந்து டெல்லிக்கு விமான சேவை தொடங்க வேண்டுமென அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள ஏர் ஷபா எனும் நிறுவனம், புதுச்சேரியில் இருந்து டெல்லிக்கு விமான சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த புதிய விமான சேவையானது புதுச்சேரியிலிருந்து விஜயவாடா வழியாக டெல்லி சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தம் 140 பயணிகள் வரை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த விமானத்தின் சேவை தீபாவளி அல்லது நடப்பாண்டு இறுதிக்குள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து காலை புறப்பட்டு மாலையில் மீண்டும் புதுச்சேரி வந்தடையும் வகையில் இந்த விமான சேவை தொடங்கப்பட உள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்