புதுச்சேரியில் பிரஞ்சுக்காரர்கள் வசித்து வந்த ஒயிட் டவுன் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கும் விடுதி, வெளிநாட்டு உணவுகளை தயாரித்து வழங்கும் உணவகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்தது. இந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் வருகை தடைபட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் உள்ள நட்சத்திர அந்தஸ்து பெற்ற தங்கும் விடுதிகள் முதல் நடுத்தர தங்கும் விடுதிகள்வரை கடும் பொருளாதார நெருக்கடி தள்ளப்பட்டுள்ளன.
இந்தநிலையில், உணவகங்கள் தங்கள் வியாபார பாணியை மாற்றியுள்ளனர். அந்த வகையில் புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் இயங்கிவந்த மேடம் சாந்திஸ் என்ற தனியார் உணவகம் பிரெஞ்ச், இத்தாலி வகை உணவு ரெசிபிகளுக்கு பிரபலமானது. இது சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் கடந்த சில மாதங்களாக முடங்கியது.
தற்போது இந்த உணவகத்தில் தயாரிக்கப்படும் சிக்கன் பிரியாணிகளை அந்நிறுவனம் விதவிதமான ஆடம்பர கார்கள் மூலம் சென்று மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விற்பனை செய்து வருகிறது. தலைமை செயலக பகுதி, செஞ்சி சாலை, செட்டித்தெரு சந்திப்பு ஆகிய பகுதிகளில் விற்பனை செய்கின்றனர். சிக்கன் பிரியாணி ஒரு பிளேட் பார்சல் ரூ. 70க்கும், முட்டை பிரியாணி ஒரு பிளேட் பார்சல் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பிரபல உணவகத்தின் தயாரிப்பு என்பதால் மக்கள் ஆர்வத்துடன் பிரியாணி வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து அந்நிறுவன உரிமையாளர் ஆண்டனி கூறுகையில், எங்கள் உணவகத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலும் தடைபட்டதால் சிரமத்துக்கு ஆளாகியுள்ளோம். கடும் சிரமத்துக்கு இடையே இரண்டு மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் அளித்து வந்துள்ளோம். இந்த மாதம் வியாபாரத்தை மாற்ற முடிவு செய்ததால், மக்களை தேடி நாங்கள் சென்றோம். எங்கள் கடையில் அமர்ந்து சாப்பிட்டால் ஒரு சிக்கன் பிரியாணி ரூபாய் 220-க்கு விற்பனை செய்வோம் . தற்போது 70 ரூபாய்க்கு கொடுக்கிறோம்.
பொதுமுடக்கத்துக்கு முன் ஒரு பிளேட் பிரியாணியில் 220 கிராம் அளவில் கோழிக்கறி கொடுத்தோம், தற்போது ஒரு பிளேட்டுக்கு 100 கிராம் கொடுக்கிறோம். ஒரு பிளேட்டுக்கு 6 ரூபாய் லாபம் வருகிறது. இதன்மூலம் என் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடிகிறது. கரோனா சூழலில் சம்பளம் இல்லாததால் என் ஊழியர்கள் எந்தவிதமான தவறான முடிவையும் எடுத்துவிடக் கூடாது. என் ஊழியர்களை நான் இழந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த முறையில் பிரியாணி விற்பனையை தொடங்கியுள்ளோம். வீதியோரங்களில் விற்பதால் ருசியில் சமரசம் கிடையாது. கார் பிரியாணி விற்பனை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.
புதுச்சேரியில் தள்ளு வண்டிகளில் பெரும்பாலான நடமாடும் பிரியாணி கடைகள் இயங்கிவரும் நிலையில், ஹோண்டா சிட்டி உள்ளிட்ட லக்சுரி கார்களில் பிரியாணி விற்பனை தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு, நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.